மண்டைதீவு புதைகுழி வழக்கானது மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை இடம்பெற்றது.
இதன்போது 80க்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45க்கும் அதிகமான சடலங்கள் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று அதற்கு அருகில் உள்ள பாடசாலைக் கிணறு ஒன்றினுள்ளும் சடலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த கிணற்றை அகழ்ந்து சடலங்களை வெளிக்கொண்டுவந்து, உண்மைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த செப்டெம்பர் மாதம் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய தாய் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (31) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது பொலிஸார் சில ஆவணங்களை சமர்ப்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, மேலதிக அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணைகளின்போது, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம் மற்றும் அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், ஆகியோருடன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

