மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையால் அங்குள்ள பல இலட்சம் இலங்கைத் தொழிலாளர்களின் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் எமது மக்களைப் பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் உடனடி மற்றும் உட்சபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அனுராதபுரம் மாவட்டம், ஒட்டப்புவ, ரன்கெத்தகம பிரதேசத்தில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
நாட்டுக்கு பாரியளவில் அந்நியசெலவாணியை அனுப்பும் பல இலட்சம் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடங்கிய மோதலினால் அவர்களின் தொழில்கள் மற்றும் உயிர் ஆபத்திலுள்ளன. இந்த மோதல் நடைபெறும் நேரத்தில் அப்பிராந்தியத்தில் தொழில் புரிந்து வரும் இலங்கையர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மாணவர்களுக்கான இலவசச் சீருடை மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் எதிர்காலத் தூண்களான பிள்ளைகளுக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டியது பெற்றோரின் கடமையாகும். முறையான பாடசாலைக் கல்வியுடன் அறநெறிக் கல்வியும், ஊட்டச்சத்துள்ள உணவுகளும் வழங்கப்பட்டு ஆரோக்கியமான சமூகமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.
தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைச் சட்டமாக்குவோம் எனத் தற்போதைய ஆளும் தரப்பு வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று 120 ரூபா கூட வழங்கப்படுவதில்லை. துறைசார் அமைச்சரோ இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை செல்லும் என்கிறார். தற்போது ஒரு கிலோ நெல்லுக்கு 80 ரூபா கூடக் கிடைக்காத நிலையில், விவசாயிகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் ஏழ்மையில் வாடுகின்றனர். முறைமை மாற்றம் பற்றிப் பேசும் இந்த அரசாங்கம், நிலக்கரி இறக்குமதியிலும் ஊழல் செய்கிறது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட 10 கப்பல் நிலக்கரியும் தரமற்றவை எனத் தெரியவந்துள்ளது. இதனால் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில், ஆளும் தரப்பு அமைச்சர்கள் மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்புச் சட்டம் குறித்துத் தெளிவில்லாத, எதையும் அறியாத ஒரு குழுவினர் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்றார்.




