மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடான தன்மை சடுதியாக தீவிரமடைந்துள்ளதையிட்டு அரசாங்கம் என்ற அடிப்படையில் பெரும் கவலையடைகிறோம். இது வலய நாடுகளின் பாதுகாப்புக்கும், உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமையும்.மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், அமைதியை நிலை நாட்டுவதற்கும் அவசரமான மற்றும் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்குமாறு யுத்தத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரிடமும் வலியுறுத்தியுள்ளோம்.இதுவே இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என வெளிவிவகாரம் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/ 2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மத்திய கிழக்கு நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடான தன்மை சடுதியாக தீவிரமடைந்துள்ளதையிட்டு அரசாங்கம் என்ற அடிப்படையில் கடும் கவலையை வெளிப்படுத்துகிறோம். இந்த பதற்ற நிலைமை வலய நாடுகளின் பாதுகாப்புக்கும், உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமையும்.இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கும், அமைதியை நிலை நாட்டுவதற்கும் அவசரமான மற்றும் தீர்க்கமான தீர்மானங்களை எடுக்குமாறு யுத்தத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரிடமும் வலியுறுத்தியுள்ளோம்.
வலய நாடுகள் அனைத்தும் தற்போதைய நெருக்கடியான நிலையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒருவருக்கொருவர் முரண்பாடான தன்மையில் செயற்படக் கூடாது என்பது இலங்கையில் நிலைப்பாடாகும்.வலய நாடுகளில் யுத்தம் தோற்றம் பெற்றால் நாடு என்ற ரீதியில் எமக்கு அது தாக்கம் செலுத்தும். யுத்தத்தை நீட்டிக்காமல் பேச்சுவார்த்தை ஊடாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை சகல தரப்பிடமும் வலியுறுத்துகிறோம்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (நேற்று முன்தினம் ) இரவு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாற்றினார்.இன்று (நேற்று) வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசியில் உரையாடவுள்ளார்.வலய நாடுகளினது பாதுகாப்பையும், உலக அமைதியையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
குவைத் நாட்டில் 3 இலட்சத்து 22437,சவுதி அரேபியாவில் 2 இலட்சத்து 42593, கட்டார் நாட்டில் 2 இலட்சத்து 0382 , டுபாய் நாட்டில் 1 இலட்சத்து 70468, ஓமான் நாட்டில் 36812, இஸ்ரேல் நாட்டில் 27472, ஜோர்தான் நாட்டில் 24182, பஹ்ரைன் நாட்டில் 14374 , லெபனான் நாட்டில் 7925, ஈராக் நாட்டில் 641, யேமன் நாட்டில் 16, ஈரான் நாட்டில் 10, சிரியா நாட்டில் 07 என்ற அடிப்படையில் இலங்கையர்கள் தொழில் புரிகிறார்கள். உறுதிப்படுத்தப்பட்ட தரவுகளுக்கு அமைய மத்திய கிழக்கு நாடுகளில் அண்ணளவாக 10 இலட்சம் இலங்கையில் தொழில்புரிகிறார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயரஸ்தானிகர் அலுவலகங்களில் 24 மணிநேர விசேட கண்காணிப்பு அலகு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு சேவை வழங்கப்படுகிறது. ஓமான், டுபாய் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலை ஆரம்பமான தினத்தில் இருந்து அரசாங்கம் என்ற அடிப்படையில் பொறுப்புடன் செயற்படுகிறோம். ஜனாதிபதி தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை கூடியது.இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தற்போது செயற்படுத்தப்படுகின்றன.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விசா காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஊடாக எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது என்றார்.





