மன்னார் மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான கட்டுக்கரை குளத்தின் கீழ், இந்த ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கைக்கான நீர் விநியோகம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் தா. திருவருட்செல்வன் தலைமையில் நேற்று (27) மதியம் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் முருங்கன் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் இ. மதுராங்கன், சம்மேளனத் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வருடம் சிறுபோகத்திற்காக மொத்தம் 2,450 ஏக்கர் நிலப்பரப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது. 6 பிரதான வாய்க்கால்களின் கீழ் உள்ள 43 குளப்பகுதிகளில் இந்தப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கட்டுக்கரை குளத்தின் தற்போதைய நீர்மட்டம் 11 அடி 7 அங்குலமாக காணப்படுவதுடன், தற்போது 2 அங்குல நீர் வான் பாய்ந்து வருகின்றது. குளத்தின் தற்போதைய கொள்ளளவு 30,982 ஏக்கர் அடி ஆகும். இம்முறை சிறுபோகச் செய்கைக்குத் தேவையான நீர் போதுமான அளவில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, கடந்த கால வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குளங்களைப் புனரமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், புனரமைப்புப் பணிகளைக் கருத்திற்கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





