மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் மக்களை அன்போடு வரவேற்பதற்கும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவே நாம் குறிப்பிட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா” சூறாவளியை அடுத்து உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயும், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும், இன்னமும் முழுமையாக மதிப்பிடப்படாத பெருந்தொகை சொத்துக்கள் சேதமடைந்தும் நாடு பேரழிவுக்கு முகங்கொடுத்துள்ளது.
குறிப்பாக மலையக மக்கள் கடும் எதிர்கொண்டிருக்கும் பின்னணியில், மலையகத் தமிழர், மலையக மண்ணில் தான் வாழவேண்டும் என நானும் விரும்புகிறேன்.
ஆனால் பாதுகாப்பான காணி உரிமையை வழங்குவதற்கு மறுத்தால், எமது மக்கள் மலை மண்சரிவில் சிக்குண்டு தொடர்ச்சியாகப் பலியாவதா? எனக் கேள்வி எழுப்பியிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், எனவே மாற்றுயோசனையாக வட, கிழக்கு மாகாணங்களில் புலம்பெயர்வினால்
வெற்றிடங்களாகி காடாகிக்கொண்டிருக்கும் காணிகளை, அவற்றின் உரிமையாளர்கள் மனமுவந்து வழங்குவார்களாயின், அங்குசென்று குடியேறி உழைத்து வாழ விரும்புகிறீர்களா என நான் சந்தித்த மக்களிடம் கேட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அண்மையில் கண்டிக்கும் கம்பளைக்கும் விஜயம் மேற்கொண்டபோது மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம் எனவும், தற்போது மனோகணேசனும் மலையக மக்களும் அதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அம்மக்களை மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், மலையகம் எமது தாயகமாகும். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்குத் தயாரில்லை. அதனால் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியை வழங்கி, அந்த மக்கள் அங்கு வாழ்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
அதற்குப் பதலளிக்கும் வகையில் கருத்துரைத்த இலங்கைத் சுமந்திரன், மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் மக்களை அன்போடு வரவேற்பதற்கும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவே நாம் குறிப்பிட்டோம் என விளக்கமளித்தார்.
அதேபோன்று புலம்பெயர் தமிழர்கள் சிலர் அவர்களது காணிகளை வழங்குவதற்கான விருப்பத்தை தம்மிடம் வெளிப்படுத்தியிருப்பதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், எனவே சுயவிருப்பின்பேரில் வட, கிழக்கில் குடியேற விரும்பும் மலையக மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்குவதற்கும், அவர்களது விவசாயம், பயிர்ச்செய்கை உள்ளிட்ட அவர்களது வாழ்வாதாரத்துக்கு அவசியமான அரச காணகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.




