மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (27) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் சபரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரதி அமைச்சர் தெரிவிக்கையில், மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வெகு விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது தொடர்பில் கோரிக்கை முன்வைத்தார்.
அதற்கு, அமைச்சர் ஆனந்த் விஜயபால குறித்த பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
அத்தோடு மலையக பகுதியில் உள்ள சட்ட விரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை முழுமையாக தடை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.









