ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை (10) இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
தலைமை நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த நீதியரசர்கள் குழாமின் ஏனைய உறுப்பினர்களாக நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, அர்ஜுன ஒபேசேகர, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் செயற்படுகின்றனர்.
இன்றைய வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது, பிரதிவாதியான நளின் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தனது மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் காரியாலயங்களுக்கு விநியோகிப்பதற்காக சதொச நிறுவனம் ஊடாக 14,000 கரம்போர்ட்கள் மற்றும் 11,000 தாயக்கட்டைகளைஇறக்குமதி செய்து விநியோகித்ததன் மூலம், அரசாங்கத்திற்கு சுமார் 06 கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அதன்படி மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனையும் நளின் பெர்னாண்டோவிற்கு 30 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இந்தத் தண்டனைகளிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரியே முன்னாள் அமைச்சர்கள் இருவரும் இந்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.





