மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார்

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளோம். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்து ஏனைய அதிகாரங்கள் சகல மாகாணங்களுக்கும் பகிரப்படலாம். அதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். யுத்தம் முடிவடைந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தலை நடத்தினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தோல்வியடைவது உறுதி என்பதை அறிந்தே அவர் தேர்தலை நடத்தினார். அரசியலமைப்பு ரீதியில் மாகாண சபைகளின் நிர்வாக தலைமைத்துவத்தை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய அரசியல் உரிமையை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாக்கவில்லை. 2017ஆம் ஆண்டு எல்லை நிர்ணய அறிக்கை ஊடாக மாகாண சபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கி மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியது.

தேர்தல் முறைமையில் ஏற்பட்ட சட்ட சிக்கலினால் மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.  இவ்வாறான பின்னணியில் மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையில் கீழ் நடத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 3 மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு கிடையாது.

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளோம். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்து ஏனைய அதிகாரங்கள் சகல மாகாணங்களுக்கும் பகிரப்படலாம் அதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கமைய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்வது நாட்டில் வீண் பிரச்சினைகளையே ஏற்படுத்தும். மாகாண சபைத் தேர்தல் ஊடாக அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என்றார்.