ஊர்காவற்துறைக்கு செல்கின்ற நீரோட்டம் கீழ் கடலில் இருந்து தங்குவாய்க்கால் ஊடாகத்தான் வரும். அவை எல்லாம் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்கினால் தான் மீன் உற்பத்திகள் அதிகரிக்கும் என நாங்கள் பலமுறை கூறினோம். அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் இராஜச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்றையதினம் நடைபெற்ற காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை இறால் உற்பத்தியானது 10 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழமையாக மாரி காலத்தில் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ளுகின்ற எங்களுக்கு இம்முறை எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளே.
தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் குறித்து பலமுறை கடற்றொழில் அமைச்சரிடம் கூறினோம். 2026ஆம் ஆண்டுக்குள் தடை செய்யப்பட்ட தொழில்களை அகற்றுவதாக அவர் உத்தரவாதமளித்தார். ஆனால் இன்னமும் அது தீர்க்கப்படவில்லை.
எங்கள் பகுதியில் 10 கடற்றொழில் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 4 சங்கங்கள் தரவைக் கடலை நம்பியும், 10 சங்கங்கள் ஆழ்கடலை நம்பியும் தொழில் செய்கின்றன. ஆழ்கடல் தொழில் செய்யும் மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட தொழில் முதல்கள் இந்தியன் இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்படுகின்றன. 50 ரோலர்கள் வந்தால் கடற்படையினர் ஒரு ரோலரையே பிடிக்கின்றனர்.
அவர்களது கப்பல் பெரிய கப்பல்கள் என்றும், அதனை பிடிப்பதற்கு பெரிய கப்பல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடற்படையினர் கூறுகின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளால் படிப்படியாக கடற்றொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவடைதல், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லல், அந்த பிரதேசங்களை விட்டு செல்லல் போன்ற துன்பியல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கடற்றொழிலாளர் வர்க்கமே இல்லாமல் போகின்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது என்றார்.
இது குறித்து நீரியல்வள திணைக்கள அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,
அந்த பாலத்தில் இருந்து 50 மீட்டர்கள் தொலைவில் கொடி கட்டினோம். அதற்குள் எவரும் வலை விட வேண்டாம் என்று நாங்கள் சங்கங்களுக்கு கடிதமும் வழங்கினோம். அப்படி இருந்தும் அதற்குள் வலைகளை விடுகின்றார்கள்.
நவம்பர் மாதம்தான் பருவகாலம். ஆகையால் நவம்பர் மாதம் அங்கு இருக்கின்ற வலைகளை அகற்றுவதற்கு திட்டமிட்டோம். இருப்பினும் டித்வா புயலால் அந்த வலைகளை அகற்ற முடியவில்லை. ஜனவரி அல்லத பெப்ரவரிக்குள் இவற்றை சீர் செய்வோம் என்றார்.





