இலங்கையில் பழைய இரும்பு மற்றும் மீள் சுழற்சி பொருட்களை சேகரிக்கும் தொழிலை நம்பியுள்ள சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக அகில இலங்கை பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சங்கத்தின் செயலாளர் சி.ரமேஷ் பாபு கருத்து தெரிவிக்கையில்,
இரும்பு, தகரம், பிளாஸ்டிக், டின் வகைகள், பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் மற்றும் சிரட்டை போன்ற மீள் சுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதன் மூலம், நாட்டின் பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதோடு, கடந்த காலங்களில் இவற்றை ஏற்றுமதி செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வியாபாரிகள் வழங்கி வந்துள்ளனர்.
கடந்த காலங்களில் உற்பத்தியாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்தப் பொருட்களின் ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் தடையை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் பொருட்களை உள்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கே வழங்கி வந்தனர்.
இருப்பினும், தற்போது பல உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உள்நாட்டு மீள் சுழற்சி வியாபாரிகளிடம் பொருட்களைக் கொள்வனவு செய்வதைக் குறைத்துவிட்டு வெளிநாடுகளிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டு மீள் சுழற்சிப் பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்வோம் என்று கூறி தொழிற்சாலை உரிமங்களைப் பெற்றுக்கொண்ட சிலர், இன்று அந்த வாக்குறுதிகளை மீறி இறக்குமதியில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் உள்நாட்டில் சேகரிக்கப்படும் பொருட்கள் சேதமடைந்து வியாபாரிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்த வேண்டும், உள்நாட்டு மீள் சுழற்சி வியாபாரிகளிடம் கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கு முறையான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அத்துடன் உள்நாட்டு உற்பத்தியாளர்களால் கொள்வனவு செய்ய முடியாத பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஏற்றுமதி செய்யும் போது நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பதோடு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதரமும் உயர்வடையும்.
கடந்த கால அரசாங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்க தவறிய நிலையில், தற்போதைய அரசாங்கம் நல்ல தீர்வை பெற்று தரும் என்று நம்புகிறோம். இருப்பினும் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை மேற்கொள்வோம் என்றார்.





