முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவீடு

முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்துக் குறித்த பேருந்து நடத்துனரிடம் உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை (30.04.2026) பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் சில தனியார் பேருந்துகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பணத்துக்குப் பற்றுச்சீட்டுக்களை வழங்குவதில்லை எனவும், மீதிப் பணம் உரிய முறையில் பயணிகளுக்குத் திருப்பியளிக்கப்படுவதில்லை எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, நெடுங்கேணி – வவுனியா பயணத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலான கட்டணம் அறவிடப்படுவதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு கிடைக்கப் பெற்றதையடுத்து வடக்கு மாகாண வீதிப் பயணிகள் அதிகார சபையால் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் விசாரிக்கப்பட்டதில் அவர் அதிக கட்டணம் அறவிட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். இதற்கு அமைவாக அவருக்கு உடனடியாகத் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு அமைவாகவே பணத்தைப் பெற்று அதற்கான பற்றுச்சீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலான கட்டணம் அறவிடுபவர்களுக்கு எதிராகவும், பயணிகளுக்குப் பற்றுச்சீட்டு வழங்காதவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதேவேளை, பொதுப் போக்குவரத்தின் போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் முறைகேடுகள் இடம்பெற்றாலோ அல்லது அதிக கட்டணம் அறவிடப்பட்டாலோ பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச் சீட்டு, ஒளிப் படங்கள் அல்லது காணொளிகள்) வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 0719090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.