மூதூர் பிரதேச சபையை இரண்டாகப் பிரிக்க வேண்டும்! -: இம்ரான் மஹ்ரூப்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகள் தொடர்பான விடயத்தில் அங்குள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக வெருகல், கோமரங்கடவல உட்பட ஐந்து உள்ளூராட்சி சபைகளையும் ஒன்றாக சேர்த்தால் கூட அதைவிட மூதூர் பிரதேச சபையின் அங்கத்தினர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது.

அதனால் மூதூர் பிரதேச சபையை இரண்டாகப் பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதை பொது நிர்வாக அமைச்சரே ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் அந்த சபையில் 12 அல்லது 13 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் நிலை உள்ளது.

அதனை கவனத்திற் கொண்டு அந்த பிரதேச சபையை இரண்டு பிரதேச சபைகளாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

அத்துடன் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபைகளிலும் அதிகமான சனத்தொகை கொண்ட வாக்காளர்கள் காணப்படுகின்றார்கள். அதில் எட்டு வட்டாரங்கள் காணப்படுகின்றன.  அங்குள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை கவனத்திற் கொண்டு வட்டாரங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? என கேட்கிறேன் என்றார்.

அதற்கு பதிலளித்த பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபை அமைச்சர் அபேரத்ன அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார்.