யாழில் சட்டவிரோத மணல் அகழ்வு: வாகனம் பறிமுதல்- சாரதி தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் – கற்கோவளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்ந்த நபர் ஒருவரின் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (28.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து விற்பனை செய்து வருவதாக பருத்தித்துறை விசேட அதிரடி படையினருக்கு மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளது.இதன்படி, நேற்று இரவு 11 மணியளவில் சட்டவிரோத மணல் அகழ்ந்து கொண்டிருந்தபோது சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வாகனத்தை கைப்பற்ற முயன்றபோது சாரதி அதனை வேகமாக ஓட்டி தப்பிச் சென்றுள்ளார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, இன்று அதிகாலை 4 மணியளவில் குறித்த வாகனம் விசேட அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சாரதி தப்பியோடியுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வாகனம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.