ராஜபக்ஷாக்களினால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி சுட்டிக்காட்டி சர்வதேச மன்னிப்புச்சபை விமர்சனம்!

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் ஆற்றவிருந்த உரைகள் இரத்துச்செய்யப்பட்டமையை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீதான முடக்கம் என்ற ரீதியில் வர்ணித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கருத்தை விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன, ராஜபக்ஷாக்களினால் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் என எவரும் இல்லாதிருந்தால் இந்த வாதம் செல்லுபடியாகியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய புகழ்பெற்ற இரு பல்கலைக்கழகங்களின் மாணவ சங்கங்களில் உரையாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அவ்வழைப்பு தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் மத்தியிலிருந்து வலுத்த எதிர்ப்பை அடுத்து, பல்கலைக்கழக சங்க ஒருங்கிணைப்புக்குழுக்களால் அவ்விரு உரைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அதனையடுத்து சமூகவலைத்தளங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டுவரும் அதேவேளை, இவ்வுரைகள் இரத்துச்செய்யப்பட்டமையானது தெற்கில் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் நலன்களை அடைந்துகொள்வதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு வாய்ப்பாக அமைந்திருப்பதாக ஒருசாரார் வெளியிட்டு வருகின்றனர்.

அதேவேளை தனது உரைகள் இரத்துச்செய்யப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருளக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தர்க்க ரீதியில் கருத்துக்களை முன்வைப்பதற்கும், கடினமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குமான வாய்ப்பை வழங்கக்கூடிய இந்த உரைகள் இரத்துச்செய்யப்பட்டமையானது ஒருபோதும் கருத்துச்சுதந்திரத்தையோ அல்லது ஜனநாயகத்தையோ வலுப்படுத்தும் வகையில் அமையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன, ‘ராஜபக்ஷாக்களினால் கொல்லப்பட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் என எவரும் இல்லாமல் இருந்திருந்தால், தற்போது நாமல் ராஜபக்ஷ முன்வைக்கின்ற கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் எனும் வாதம் செல்லுபடியாகியிருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.