வடக்கில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான “சிசு செரிய” பேருந்துச் சேவை விரைவில்!

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கு மாகாணத்தில் விரைவில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து கல்வி நடவடிக்கைக்காகச் செல்லும் மாணவர்களுக்கு இதன் நேரடி நன்மை கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிசு செரிய’ சேவையானது கல்வி அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நம்பகமான சேவையாகும்.

மாணவர்களும் ஆசிரியர்களும் எவ்வித இடையூறுகளுமின்றி பாதுகாப்பாகக் கல்வி நிலையங்களுக்குச் சென்று திரும்புவதற்காகவே பிரத்தியேகமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இச்சேவையில் ஈடுபட்டுள்ளன. எனினும், வடக்கு மாகாணத்தில் இதுவரை இச்சேவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் குறைந்த அளவிலேயே இயங்கி வந்தது.

இந்த நிலைமையை மாற்றி, சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் வடக்கு மாகாணம் முழுவதும் சுமார் 60 புதிய வழித்தடங்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்களது பரிந்துரைகளுக்கு அமைய தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்ட ரீதியான வழித்தடங்களின் விபரம்:

யாழ்ப்பாணம்: 25 வழித்தடங்கள்

முல்லைத்தீவு: 12 வழித்தடங்கள்

கிளிநொச்சி: 9 வழித்தடங்கள்

வவுனியா: 8 வழித்தடங்கள்

மன்னார்: 6 வழித்தடங்கள்

இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்கும். மாணவர்களுக்கு சலுகைக் கட்டணமும், ஆசிரியர்களுக்கு சாதாரண கட்டணமும் அறவிடப்படும்.

ஆரம்பக் கட்டமாக குறைந்தது 40 பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வழித்தடத் தெரிவு மற்றும் அனுமதி வழங்கும் செயன்முறைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. அத்துடன், சில பகுதிகளில் இச்சேவை ஏற்கனவே சோதனை அடிப்படையில் இயங்கி வருகின்றன.

இதன் மூலம் வடக்கு மாகாண மாணவர்கள் குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கல்விப் பயணம் உறுதிசெய்யப்படும் என்றார்.