வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்டெர்ன்’ (LANTERN – Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைத்து முன்னெடுக்கவுள்ளதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் கிறிஸ்டின் பார்ஸோ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார்.
புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இவ்விசேட சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

இச்சந்திப்பில், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஐ.ஓ.எம். நிறுவனத்தால் வழங்கப்படவுள்ள உதவிகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்படவுள்ளன என்பது குறித்து விவரிக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியலும் ஆளுநரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் தமது தாய்நாட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவிப்பவர்களுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆளுநர் இதன்போது விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த ஐ.ஓ.எம். பிரதிநிதிகள், யு.என்.டி.பி. நிறுவனத்துடன் இணைந்து அடுத்த மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ள ‘லன்ரேன்’ செயற்றிட்டம் தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.
அத்துடன், அப்புதிய செயற்றிட்டத்தின் ஊடாக, இவ்வாறு நாடு திரும்பும் ஏதிலிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
இவ்விசேட சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் ஐ.ஓ.எம். நிறுவனத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.






