வடக்கு மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் யாழில் முக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண விவசாயத் துறையைத் தேசிய மட்டத்துக்கு இணையாகக் கட்டியெழுப்புவதுடன் வடக்கு மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான முக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (25.03.2026) காலை யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய விவசாயத் திணைக்களத்தின் தேசியப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி.விக்கிரமாராச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் மற்றும் வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல் சுமார்- 04 மணி நேரம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வடக்கு மாகாண விவசாயத் துறையின் தற்போதைய சவால்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் கருத்துத் தெரிவிக்கையில்,

காலநிலை மாற்றம், ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி, வெள்ளம் மற்றும் நீண்ட வறட்சி என்பன எமது விவசாயிகளின் பயிர்ச்செய்கை நாட்காட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் தென்னையில் வெள்ளை ஈ மற்றும் வாழையில் பனாமா போன்ற புதிய நோய்த் தாக்கங்களால் விவசாயிகள் விளைச்சல் இழப்பைச் சந்திக்கின்றனர். இதற்குத் தீர்வாக உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளுடனான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். வறட்சியைத் தாங்கக் கூடிய பயிரினங்களை அறிமுகப்படுத்துவதுடன் விவசாயிகளின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க விவசாய அமைப்புக்களை வலுவூட்ட வேண்டும்

அத்துடன் அரச – தனியார் பங்குபற்றலுடன் பெறுமதி சேர் உற்பத்திகள், குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகள் மற்றும் விவசாயப் பதனிடும் வலயங்களை உருவாக்க வேண்டும். தேசிய மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களுக்கிடையிலான சிறந்த ஒருங்கிணைப்பின் ஊடாகவே இதனைச் சாத்தியமாக்க முடியும். இந்தக் கூட்டமானது வெறும் கலந்துரையாடலாக அன்றி பொறுப்புக்கள் மற்றும் காலக் கெடுவுடன் கூடிய ஒரு தெளிவான செயற்றிட்டமாக மாற வேண்டுமென வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தேசிய விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. விக்கிரமாராச்சி கருத்துத் தெரிவிக்கையில், தேசிய விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கும் மாகாண நிகழ்ச்சித் திட்டத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதே எமது பிரதான நோக்கமாகும். வடக்கு மாகாண விவசாயிகளின் அர்ப்பணிப்பும், மாகாணத்திலுள்ள விவசாய வளமும் அபரிமிதமானது. விவசாயத் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நியமனங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையான முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் ஒப்பந்த அடிப்படையிலாவது வெற்றிடங்களை நிரப்பிச் சேவைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

மேலும் தேசிய விவசாயத் திணைக்களத்தின் எட்டுத் தூண்கள் வேலைத் திட்டத்தின் கீழ் வடக்கின் விவசாயத்தை எவ்வாறு மேம்படுத்துவது? என்பது தொடர்பான விரிவான விளக்கமளிப்பொன்றை வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன் மேற்கொண்டார்.

வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளரினால் முன்வைக்கப்பட்ட விசேட சமர்ப்பணத்தில் வடக்கு மாகாணத்திலுள்ள 149,136 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேவைகள் சுட்டிக்காட்டப்பட்டன.

குறிப்பாக வாழையில் பனாமா நோய், கொடித் தோடையில் வாடல் நோய், பார்த்தீனியக் களை, தென்னை வெள்ளை ஈ மற்றும் நெற்செய்கையில் களைநெல் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்குரிய உயிரியல் கட்டுப்பாட்டு முகவர்களை உற்பத்தி செய்யும் நிலையங்களை வடக்கு மாகாணத்துக்குள் நிறுவுதல், யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்குச் செய்கையை ஊக்குவித்தல் மற்றும் வடக்கு மாகாணத்துக்குள் இழைய வளர்ப்பு ஆய்வுகூடங்களை அமைத்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன், அனுமதிக்கப்பட்ட ஆளணிக்கும், தற்போது சேவையிலுள்ள ஆளணிக்கும் இடையிலான இடைவெளி தரவுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டது.

விரிவான கலந்துரையாடலின் முடிவில் முக்கிய தீர்மானங்கள் மற்றும் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய ‘ஆட்டக்காரி’ நெல்லினத்துக்கு விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பரிந்துரை இதுவரை இல்லாத காரணத்தால் அதற்கான நியாயமான நிர்ணய விலையைத் தீர்மானிப்பதிலும், விவசாயக் காப்புறுதியைப் பெற்றுக் கொள்வதிலும் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நீண்டகாலப் பிரச்சினை கூட்டத்தில் ஆழமாக ஆராயப்பட்டதுடன் ஆட்டக்காரியை ஒரு பிராந்திய நெல்லினமாக உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தேசிய விவசாயப் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார்.