வத்தளையில் சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு : 18 வயது இளைஞன் கைது!

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை  (17) ஹெந்தல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, எவ்வித சட்டபூர்வ அனுமதிப்பத்திரமுமின்றி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 லீற்றர் டீசல் மற்றும் 05 லீற்றர் பெட்ரோல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.