சமூக வலுவூட்டல் மூலம் வறுமையை ஒழிக்கவும் பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்யவும் அரசாங்கம் செயல்படுத்தியுள்ள ‘சமூக சக்தி’ தேசிய செயற்பாடு, தற்போது அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சமூக சக்தி தேசிய செயற்பாடு குறித்து கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களைச் சேர்ந்த சமூக அபிவிருத்தி பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (13) அலரி மாளிகையில் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சுமார் 180 பில்லியன் ரூபா கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்தி சபைகளுக்கு இந்த ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பொறுப்பு உள்ளது.
இவ்வாறு புதிதாக நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்தி சபைகள் ஒவ்வொன்றுக்கும் தலைவராக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அலுவலர்கள், இந்த வேலைத்திட்டத்திற்காக சமூக வலுவூட்டல் அலுவலர்களாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் சமூக அபிவிருத்தி சபையின் செயலாளராகவும் செயற்படுவார்கள்.
சமூக அபிவிருத்தி சபையின் தலைவர், செயலாளர் மற்றும் பதவி வழியாக நியமிக்கப்படும் ஏனைய உறுப்பினர்களைக் கொண்ட சமூக அபிவிருத்தி நிர்வாக சபை, சமூக பிரதிநிதிகள் குழு மற்றும் மூலோபாயக் குழு உட்பட 25 உறுப்பினர்கள் இதில் உள்ளடங்குவர்.
அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்மொழிவுகளை அடையாளம் காணுதல், அபிவிருத்தி முன்மொழிவுகளை முன்னுரிமைக்கு ஏற்ப தெரிவுசெய்தல் மற்றும் அந்த அபிவிருத்தி முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல் போன்ற பணிகளை சமூக அபிவிருத்தி சபைகள் தற்போது ஆரம்பித்துள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே கலந்து கொண்டதுடன், நாட்டில் பல பரிமாண வறுமையை ஒழிக்க சமூக சக்தி தேசிய செயற்பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும், இந்த செயற்பாட்டை, வெற்றியடையச் செய்வதற்கும் அதன் நீண்டகால இலக்குகளை அடைவதற்கும் தேசியத் தலைமையை வழங்குவதற்கு ஜனாதிபதியின் நேரடித் தலையீடு தொடர்பிலும், அத்துடன் உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக பங்கேற்பு அணுகுமுறையின் மூலம் வறுமையை ஒழிக்க சமூக அபிவிருத்தி சபையின் கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாக கருத்துத் தெரிவித்தார்.
தனியான அபிவிருத்தித் திட்டங்கள் அல்லது செயற்பாடுகள் மூலம் வறுமையை ஒழிக்க முடியாது என்றும், இதற்காக ஒரு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், அந்த முழுமையான அணுகுமுறையில், சமூக சூழல், உணவுப் பாதுகாப்பு, மனித வள அபிவிருத்தி, பாதுகாப்பு, உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறை கையாளப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இவ்வருடத்தில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்தி, வறுமையை ஒழிப்பதும் கிராமிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதும், சமூக அபிவிருத்தி சபைத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாகும் என்றும் மேலும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உரிய இலக்குகளை அடைவதற்காக அனைத்து பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இணைந்து செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் ,நாட்டின் முன் உள்ள சவால்களை வெற்றிக்கொள்வதற்காக அனைவரும் செயலூக்கத்துடன் ஈடுபட்டு பங்களிப்பளிப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார கருத்துத் தெரிவிக்கையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அவசியமான தொழில்நுட்ப விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
சமூக அபிவிருத்தி சபைகள் செயற்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சமூகத்தின் முன்மொழிவுகளையும் கருத்துகளையும் பிரதிபலிக்கும் வகையில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதன் அவசியம், திட்டங்களை சரியாக அடையாளம் காணும் முறை மற்றும் விஞ்ஞான அடிப்படையில் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் முறை குறித்து, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், நிகழ்வில் கலந்து கொண்ட மேல் மாகாண சமூக அபிவிருத்தி சபைகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு மேலதிக விளக்கங்களை வழங்கினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான அசித நிரோஷண, சமன்மலி குணசிங்க, சந்தன சூரியாரச்சி, விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க , கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் சமூக சக்தி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.








