விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன் 3,307 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் ஜூலை 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,307 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1115 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 1136 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 23 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 959 பேரும், கஞ்சா செடிகளுடன் 25 பேரும், போதை மாத்திரைகளுடன் 44 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன்  05 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 02 கிலோ 149  கிராம் 309 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 02 கிலோ 006 கிராம் 305 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்,  39 கிராம் 25 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 174 கிலோ 323 கிராம் 746 மில்லிகிராம் கஞ்சா  போதைப்பொருளும், 57951 கஞ்சா செடிகளும், 13,304,838 போதை மாத்திரைகளும், 79 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.