வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நிவாரணங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் கிடைப்பதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதுடன் அரசாங்கத்தின் கொடுப்பனவுகளை பாதிக்கப்பட்டவர்கள் இலகுவான முறையில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகோண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த சேதங்களை ஈடுசெய்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தற்போது நிறைவேற்றப்படும் 500 பில்லியன் ரூபா போதுமானதல்ல. அதேநேரம் ஜனாதிபதியும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, நிலைமைகளை அறிந்து வருகிறார். அதனடிப்படையில் மன்னாருக்கும் ஜனாதிபதி வந்தார். அங்கு பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொண்டபோது, அதனை மேற்கொள்வதாக எமக்கு வாக்குறுதியளித்தார்.ஏனைய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோன்று பாரியளவில் விவசாய பூமிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மீள இயல்புநிலைக்கு வருவதற்கு தேவையான நிவாரணங்களை அரசாங்கம் வழங்க வேண்டும். என்றாலும் அதிகாரிகளின் அசமந்தப்போக்கு காரணமாக அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரண தொகைகள் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள். அத்துடன் கிராம சேவகர்கள் சென்று பார்வையிடாத பல பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் இன்னும் இருக்கின்றன. தற்போது அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து, பாதிக்கப்பட்டமைக்கான ஆதராமாக புகைப்படம் இருக்கிறதா, தண்ணீர் வந்ததா, பாதிக்கப்பட்டதா என கேட்பதாக மக்கள் எங்களிடம் தெரிவிக்கிறார்கள்.
எனவே இந்த விடயத்தில் ஒரு பிரதேசத்தில் கிராமசேவகர், அபிவிருத்தி உத்தியாேகத்தர், சமுர்த்தி அதிகாரி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக செயற்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய நிவாரண தொகைகளை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முகாம்களிலும் வேறு இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண தொகைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற சரியான வழிகாட்டல் இல்லாமல் இருக்கிறது. அதனால் பல இடங்களில் பிரதேச செயலகங்களுக்கு முன்னால் மக்கள் கொடுப்பனவுகளை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்து வருவதை காணக்கூடியதாக இருந்தது. கம்பளை பிரதேசம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் மிகவும் வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துவந்தவர்கள். தற்போது அனைத்தையும் இழந்து, அரசாங்கத்தின் நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொள்ள நீண்டதூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அதனால் அரசாங்கம் அந்த பணத்தை அந்த பகுதியில் இருக்கும் பள்ளிவால், விகாரை, கிராம சேவகர் பிரிவினூடாக பெற்றுக்கொடுக்க முடியும்.இதுதொடர்பில் நாங்கள் தெரிவித்தபோது பிரதேச செயலாளர்கள் அதனை மறுக்கிறார்கள். அதனால் அரசாங்கம்தான் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்குவதற்கு முன்னர், வியாபாரிகள், தனவந்தர்கள் தங்களின் சாெந்த பணத்தை அள்ளிக்கொடுத்து, அவர்களின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்திருக்கிறார்கள். சகல மத குருக்களும் பாரியளவில் உதவி செய்துவருகிறார்கள். குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கோடிக்கணக்கில் பணம் மற்றும் பொருட்களை சேர்த்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளித்து வந்திருக்கிறது.
எனவே வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நிவாரணங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் கிடைப்பதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும். அதேநேரம் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும்போது அதன் பாதிப்புகளை கட்டுப்படுத்திக்கொள்ள தேவையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.




