25 ஆண்டுகளுக்குப் பிறகு உடுமலை தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் திமுக!

உடுமலை தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிபெறும் முனைப்பில் திமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் வெற்றி பெற முடியவில்லை.

கடந்த காலங்களில் இத்தொகுதியில் கூட்டணி கட்சியினருகே வாய்ப்பு அளிக்கப்பட்டதால் தான் வெற்றி வாய்ப்பு பறிபோவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால் இம்முறை உடுமலை தொகுதியை திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என்ற குரல் திமுக நிர்வாகிகள் மத்தியில் வலுத்தது.

மேலும் இத்தொகுதி அதிமுகவின் கோட்டை என்ற பிம்பத்தை மாற்றி திமுகவின் கோட்டை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற ஆதரவு குரல்கள் அக்கட்சியினரிடையே எதிரொலித்து வருகிறது.

இத்தொகுதியில் 1967, 1971 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற 3 தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.ஜே.சாதிக் பாட்சா வெற்றி பெற்றதால் உடுமலை திமுகவின் கோட்டை என அழைக்கப்பட்டு வந்தது.

அதன் பிறகு, அதிமுகவின் தொடர் வெற்றிகளால் அதிமுகவின் கோட்டையாக மாறியது. கடந்த 5 சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிமுகவை சேர்ந்த உடுமலை கே.ராதாகிருஷ்ணன் (2021, 2016), பொள்ளாச்சி ஜெயராமன் (2011), சி.சண்முகவேல் (2006, 2001) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் டி.செல்வராசு வெற்றி பெற்றதே உடுமலை தொகுதியில் கடைசியாக திமுகவுக்கு கிடைத்த வெற்றி. அதன் பிறகு இத்தொகுதியில் திமுகவோ, அதன் கூட்டணி கட்சியோ வெற்றி பெறவில்லை.

எனவே, கால் நூற்றாண்டு தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இம்முறை உடுமலை தொகுதியை கைப்பற்ற திமுகவினர் தீவிரமாக உள்ளனர். தற்போது நேரடியாக திமுக களமிறங்கியுள்ள நிலையில் வேட்பாளராக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.