அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் காவல்​துறை அதி​காரிகளை தமிழக அரசு காப்​பாற்ற முயற்​சிப்​பது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் மீதான விசா​ரணை​யின் தற்​போதைய நிலை குறித்து இன்று அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளனர்.

சென்னை அண்​ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட விவ​காரத்​தில் புகார் அளிக்​கச் சென்ற சிறுமியின் பெற்​றோரை அனைத்து மகளிர் காவல்​நிலைய பெண் ஆய்​வாளர் உள்​ளிட்​டோர் தாக்​கிய சம்​பவம் தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்து வரு​கிறது.

இதே​போல், பாதிக்​கப்​பட்ட தங்​களுக்கு இழப்​பீடு வழங்​கக் கோரி​யும், சம்​பந்​தப்​பட்ட காவல்​துறை அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி​யும் சிறுமியின் தாயாரும் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்​கு​கள் நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், இந்த வழக்​கில் போக்சோ விதி​களை மீறிய காவல்​துறை அதி​காரி​கள் மீது என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது, என கேள்வி எழுப்​பினர்.

அதற்கு அரசு தரப்​பில், சம்​பந்​தப்​பட்ட பெண் ஆய்​வாளர் உள்​ளிட்ட காவல்​துறை அதி​காரி​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டது. அதற்கு கண்​டனம் தெரி​வித்த நீதிப​தி​கள், “குற்ற வழக்​குப்​ப​திவு செய்​வது என்​பது வேறு. துறை ரீதியி​லான நடவடிக்கை என்​பது வேறு.

நீங்​கள் எந்த மாதிரி​யான நடவடிக்கை எடுத்​துள்​ளீர்​கள்” என்​றனர். அதற்கு அரசு தரப்​பில், “இந்த வழக்​கில் தொடர்​புடைய காவல் துறை அதி​காரி​களுக்கு எதி​ராக கடந்த 2024-ம் ஆண்டே துறை ரீதியி​லாக​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது” என தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​திகள், புகார் அளிக்க வந்த சிறுமியின் பெற்றோரை, போலீ​ஸாரே தாக்​கியது என்​பது ஏற்​புடையதல்ல.

இந்த வழக்​கில் போலீ​ஸார் போக்சோ விதி​களை அப்​பட்​ட​மாக மீறி​யுள்ளனர். அவர்களை இடைநீக்​கம் செய்​வது மட்​டுமே தண்டனை கிடை​யாது. இந்த வழக்கில் அவர்களை தமிழக அரசு காப்​பாற்ற முயற்​சிப்​பது ஏன் என தெரிய​வில்​லை.

எனவே, சம்​பந்​தப்​பட்ட காவல்​துறை அதி​காரி​களுக்கு எதி​ராக நடத்​தப்​பட்ட துறை ரீதியி​லான விசா​ரணை​யின் தற்​போதைய நிலை என்ன என்​பது குறித்து அரசு தரப்​பில் நாளை (இன்​று) அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.