அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் – பெங்களூரு புகழேந்தி கணிப்பு

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். இதுதொடர்பாக ஓசூரில் நேற்று செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மேடையில் நின்று கொண்டு, “அதோ பாருங்கள் கொடி” என தவெக கொடியை காண்பித்து அரசியல் செய்கிறார்.

தவெக தலைவர் விஜய், “பாஜக தங்களுக்கு எதிரி’ என்று கூறுகிறார். பாஜகவை கூட்டணியில் வைத்துக் கொண்டு எந்த தைரியத்தில் தவெக கொடியை காண்பித்து அது வானுயரப் பறக்கிறது என்று பழனிசாமி கூறுகிறார். அதிமுக தொண்டர்தான் தவெக கொடியை வைத்திருந்தார். சொந்த கட்சிக்காரரை அடுத்த கட்சியின் கொடியை பிடிக்கச் செய்யும் அவமானம் அதிமுகவுக்கு இன்று ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் பழனிசாமி இருக்கும் வரை விஜய் கூட்டணிக்கு வர மாட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள். விஜய் நேரடியாக கரூருக்கு செல்லவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரோடு ஷோ நடத்தக் கூடாது என கூறுகிறது. ஆனால், பழனிசாமி ரோடு ஷோ நடத்தி வருகிறார். அவருக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. மீண்டும், இதேபோல ஒரு துயரம் நடந்தால் யார் பொறுப்பேற்பது?, என்றார்.