நெல்லையைச் சேர்ந்த ரகமத் அலி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி சங்கர் நகர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பேச்சிப்பாண்டியன், தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
இதுகுறித்து நான் அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறையினருக்கு புகார் அனுப்பினேன். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்து, “இந்த மனு தவறான புரிதலின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது.
நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை 2 வாரத்தில் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு மனுதாரர் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.





