உதவி சுற்றுலா அலுவலர்களுக்கு பணி ஆணை: அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்

தமிழக சுற்றுலா துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுற்றுலா துறையில் புதிய முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் பெருகி வருகின்றன. சுற்றுலா துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த 2024-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக, உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு சுற்றுலாத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் பணி ஆணைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

21 காலிப் பணியிடங்கள்: சுற்றுலா துறையில் 21 உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில், 4 இடங்கள் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணி தேர்வு (நேர்காணல் இல்லாத பதவிகள்) மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான தேர்வு முடிவு ஜன.23-ம் தேதி வெளியானது. கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. மேலும், மாவட்ட சுற்றுலா அலுவலர் பதவியில் 8 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் விரைவில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.