கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அவரது மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்ட பல பெண்கள் நேற்று அக்டோபர் 16 ஆம் தேதி மக்காச்சோளம் விளைநிலத்தில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மதியம் சுமார் 2.30 மணியளவில் பலத்த சத்தத்துடன் இடி இடித்ததால் அங்கு வேலை செய்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
மாலை சுமார் 4.30 மணிக்கு ஊர்க்காரர்களைத் தொடர்பு கொண்ட தவமணி என்ற பெண், `சிவக்குமார் நிலத்தில் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி இடித்தது. அப்போது நாங்கள் மயங்கி விழுந்துவிட்டோம். நான் இப்போதுதான் கண் விழித்தேன். மற்றவர்கள் மயக்கத்திலேயே கிடக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார்.
அதன்பிறகு ஊர்க்காரர்களும், பக்கத்து நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் தவமணி சொன்ன இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது களையெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நில உரிமையாளர் சிவக்குமாரின் மனைவி ராஜேஸ்வரி, கழுதூர் கிராமத்தை சேர்ந்த கனிதா, பாரிஜாதம், சின்னபொண்ணு என்கிற ராஜேஸ்வரி உள்ளிட்ட நான்கு பெண்கள் உயிரிழந்து கிடந்தனர்.
தவமணி என்பவருக்கு பார்வை பறிபோன நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தது வேதனை தருகிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு உயிரிழந்தோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு அளித்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பார்வையை இழந்து தவிக்கும் தவமணி என்பவருக்கு உயர்ந்த மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.