“கல்லாப்பெட்டி கூட்டணியை கஷ்டப்பட்டு சேர்த்த ஸ்டாலின் சார்!” – விஜய் விறுவிறு பேச்சு

“நமது ஸ்டாலின் சார், அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், யாராவது நிழலுக்கு ஒதுங்கினாலும் கூட்டணியில்சேர்த்துக் கொள்கிறார். கொள்ளையடித்து வைத்திருக்கிற பணத்தில் ஒரு பங்கு கொடுத்து கல்லாப்பெட்டி கூட்டணியை கஷ்டப்பட்டு சேர்த்திருக்கிறார்” என தவெக நிர்வாகிகள் சந்திப்பில் நடிகர் விஜய் பேசினார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குட்டிக் கதையுடன் தனது பேச்சைத் தொடங்கிய அக்கட்சியின் தலைவர் விஜய், ‘‘ உங்கள் எல்லோரையும் நீங்கள் இருக்கும் ஊரில் சந்திக்க எனக்கு பெரிய ஆசை. ஆனால், நமக்கு எதிராக என்னென்ன சூழ்ச்சி நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அதனால், உங்களுக்கு ஒரு வாக்குறுதியாகச் சொல்கிறேன், நமது ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேரடியாக வந்து உங்களைச் சந்திக்கிறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஸ்டாலின் சார் ஒரு உருட்டு உருட்டினார். வரப்போகிற தேர்தல் தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல். இதை தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் என்று சொல்கிறார். இன்னும் கொஞ்சம் மேலே போய் தமிழ்நாட்டுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குமான தேர்தல் என்று சொல்கிறார். ஏன் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என்று சொல்கிறீர்கள்? எந்தத் தேர்தலை எப்படிக் கையாள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.

போருக்குப் போகும் போதுதான் படை பரிவாரங்களுடன் போவார்கள். ஆனால் நீங்கள் ஒன்றுக்கும் உதவாதபால் டப்பாவை உருட்டிக் கொண்டிருக்கிறீர்களே. உண்மையிலேயே இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத திமுக-வுக்குமான போர். தமிழ்நாடு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். தூய சக்திடிவிகே-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும்தான் இந்தப் போர். உக்கிரமான போரில் பால் டப்பாவை உருட்டிக் கொண்டு இன்னொரு காமெடி வேற. அவரது ஆட்சியில்தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருக்கிறதாம். தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம்தான். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ஆட்சியில்.

இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத உல்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் இல்லை. சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடிக்காரர் நடத்துகிற மாநிலமாக மாறிவிட்டது. தடைகள், சதிகள், சூழ்ச்சிகள் எல்லாவற்றையும் தாண்டி 2026 தேர்தலில் டிவிகே தில்லாக நிற்கும். எனக்கு புது நண்பர் முதல்வர்தான். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார்.

நாங்கள் எல்லோரும் உங்களுக்கு நண்பர்கள் என்றால் அப்புறம் ஏன் சார் கரூர் சம்பவத்தில் என் மீது பழியை தூக்கிப் போட்டீங்க? உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அப்படி பேசி இருப்பீர்களா? நாங்கள் உங்களுக்கு நண்பர்கள் என்றால் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு இடமோ, அனுமதியோ ஏன் கொடுக்கவில்லை? எல்லாவற்றையுமே நீங்களே செய்துவிட்டு போகிற போக்கில் அடித்துவிட்டுப் போகிறீர்கள்.

உங்களுடைய உண்மையான நண்பர்கள் லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம்தான். உங்கள் ஆட்சிதான் தப்பான ஆட்சி. தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத ஆட்சி. எங்கள் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி என்கிறார்கள். அதற்கு அர்த்தம் எங்கள் வாக்குச் சாவடி, விஜய் வாக்குச் சாவடி என்பது தான். பெரும்பான்மை மக்கள், சிறுபான்மை மக்கள் குறித்து அண்ணா சொன்னதுதான் டிவிகே-வின் நிலைப்பாடு. எதற்கும் சமரசம் கிடையாது.

மின்சார கட்டணம் மாதா மாதம் வசூலிக்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா. ஒரு மாதம் கணக்கெடுத்தால் 100 யூனிட் வந்தால் பில் கட்டமாட்டார்கள். அதே இரண்டு மாதமாக 200 யூனிட் என்றால் மக்களுக்கு பெரிய சுமைதானே. மலை கிராமங்களில் பஸ் வசதி மருத்துவமனை வசதி இல்லை. பெண்கள் பாதுகாப்புக்கு நம்பர் ஒன் மாநிலம் என்கிறார்கள். ஆனால், நாங்கள் பாதுகாப்பாக இல்லாத மாநிலத்தில் இருக்கிறோம் என்று பெண்களே சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு காணாமல் போய் ரொம்ப நாளாச்சு. இதை நான் ஏன் பேசுறேன்னு சிஎம் சார் சங்கடப்படுறாராம். கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் மட்டும் வரவில்லை.