காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆக.7-ல் சென்னையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஆக.7-ம் தேதி சென்னையில் முதல்கட்டமாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்வேறு கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவும், ஆண்டுதோறும் காவிரிநீர் பங்கீட்டை தடையின்றி பெறவும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் பல்வேறு கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அதிமுக அமைப்பு செயலாளர் ஓ.எஸ் மணியன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவாக தலைவர் தி.வேல் முருகன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பாமக தேர்தல் பிரிவு செயலாளர் ஜெயராமன், அமமுக பொருளாளர் கரிகாலன், கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, பாஜக சார்பில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுப் பேசினர்.

அதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு: காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக, தமிழகத்தின் உரிமையைப் பாதிக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப் போக்குக்கு தமிழக அரசியல் கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

மே, ஜூன் ஜூலை மாதங்களில் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய 40 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுத்துள்ளதால், உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு பதிலாக, கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை, பிரதமருக்கு கடிதம் என இன்றைய தமிழக அரசு நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த இக்கட்டான தருணத்தில், தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதை உதாசீனப்படுத்திவிட்டு செயல்படும் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை அனைத்துக் கட்சி கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், ஆக.7-ம் தேதி சென்னையில் முதல்கட்டமாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘7-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.