படத் தயாரிப்பாளரிடம் முன்பணமாக வாங்கிய ரூ.4.25 கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் படத்தயாரிப்பாளரான எல்ரெட் குமார், கடந்த 2013-ல் திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘நடிகர் சிம்பு என்ற டி.ஆர்.சிலம்பரசனை வைத்து தான் தயாரிக்கவிருந்த படத்தை இயக்க கவுதம் வாசுதேவ் மேனனுடன் 2008-ல் ஒப்பந்தம் போட்டிருந்தேன்.
அதற்காக ரூ.4.25 கோடியை முன்பணமாக வழங்கினேன். ஆனால், அந்த ஒப்பந்தப்படி படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிக் கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை’ என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வாங்கிய தொகை ரூ. 4.25 கோடியை படத்தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென கவுதம் வாசுதேவ் மேனனுக்கு கடந்த 2022-ல் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.ஜி.திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
எதிர் மனுதாரரான எல்ரெட் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ரமேஷ்பாபு, ‘‘படத்தை இயக்கிக் கொடுக்கவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை’’ என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், வாங்கிய ரூ.4.25 கோடியை கவுதம் வாசுதேவ் மேனன், வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.





