சாமானிய மக்களின் நலன் சார்ந்தது தமிழக இடைக்கால பட்ஜெட்: இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு

“கடும் நிதிச் சுமைகளுக்கு இடையே சாமானிய மக்களின் நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு – செலவு அறிக்கையை வரவேற்கிறோம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவு அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய மிகப் பெரிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை விட, நடப்பில் உள்ள நலத்திட்டங்களை தொடர்வது மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு நேரடி நிதி உதவி வழங்கும் திட்டங்கள் தொடர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கிட உரியத் திட்டங்கள் தீட்டப்படும் என்ற அறிவிப்பு, இன்றைய 4 வது தொழில் நுட்பப் புரட்சியை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் சரியான முன்னெடுப்பாகும். மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்விலும் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்பிற்குரியது. உற்பத்தி, சேவைத் துறை, தகவல் தொழில்நுட்பம் ஆகியவை வளர்ச்சிக்கு ஆதாரம் என சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்கு 48,534 கோடி ரூபாயும், உயர் கல்வித் துறைக்கு 8005 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு வரவேற்பிற்குரியது. எனினும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரித்திட வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில், தொழிற்கல்லூரிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 54,301 மாணவர்கள் பயன் பெற்றிருப்பதும், அவர்களுக்கான கல்வி மற்றும் உணவுக் கட்டணங்களுக்காக இதுவரை 1,512 கோடி ரூபாயை மாநில அரசு செலவிட்டுள்ளதும் வரவேற்பிற்குரியது.

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடுகளை செய்யாமல் வஞ்சித்த போதிலும், உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக, சாலை, பாலம், நகர்ப்புற வசதிகள் மேம்பாட்டுக்கு அதிக நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மிஜி பூங்கா/தொழிற்பூங்கா விரிவாக்கம் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கம் வரவு – செலவு அறிக்கையில் வெளிப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் கூடுதலாக அதிகரித்திருக்க வேண்டும். அரசுத்துறைகளில் ஒப்பந்தம் தற்காலிகம், தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் பணியாளார்களின் ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் போன்ற அறிவிப்புகள் இல்லாதது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.

குளிர்சாதன கிடங்குகள், விதை வங்கி, விவசாய இயந்திர உதவி திட்டங்கள், பாசன திட்டங்கள் மற்றும் விவசாய உற்பத்தி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு, ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 70 விழுக்காடு மானியம் வழங்கல், வேளாண்மைத் துறைக்கு ரூபாய் 47,248 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை வரவேற்பிற்குரியன.

நாகை, சிவகங்கை மற்றும் கரூரில் வேளாண்மை கல்லூரி, கிருஷ்ணகிரியில் தோட்டக் கலைக்கல்லூரி என்ற அறிவிப்பு வரவேற்பிற்குரியது. நிதி ஒதுக்கீடுகள் செய்வதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை கடுமையாக புறக்கணிக்கும் நிலையில், கடும் நிதிச் சுமைகளுக்கு இடையே சாமானிய மக்களின் நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் இடைக்கால வரவு – செலவு அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.