‘சீட்’ கேட்டு கட்சியினர் எனக்கு நெருக்கடி தருகின்றனர் – திருமாவளவன் வேதனை

‘தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்டு கட்சியினர் என்னை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றனர்” என விசிக தலைவர் திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்தார்.

சென்னையில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டொரு நாளில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும். கட்சியின் நலன்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே போல கூட்டணி நலன்களும் முக்கியமானது. இன்றைய அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

தொகுதி பங்கீடு இன்னும் கையெழுத்தாகவில்லை என்பது உண்மைதான், ஆனால், இழுபறி என்ற நிலை இல்லை; தாமதம் தான் உள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணிக்கு வலுவான சக்தியாக உள்ளது, விரைவில் அவர்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். சசிகலா – ராமதாஸ் தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு திருமாவளவன் முகநூல் வழியே நேரலையில் தொண்டர்களிடம் பேசிய போது, “திமுக கூட்டணியில் 10 தொகுதிகளுக்கும் குறைவாகவே கிடைக்கும். கட்சியில் பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தேர்தலில் போட்டியிட் சீட் கேட்டு கட்சியினர் என்னை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நிலை தொடர்கிறது.

குறைந்த தொகுதிகள் கிடைக்கிறதே என்ற வலி இருந்தாலும், வலிமை இருந்தால்தான் வலதுசாரிகளை வீழ்த்த முடியும். தலைமைக்கு நெருக்கடி இல்லாமல் முடிவெடுக்க கட்சியினர் வாய்ப்பு வழங்க வேண்டும். குறைந்த தொகுதிகள் கிடைப்பதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிரமம் உள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் 25 தொகுதிகள் கிடைத்தபோது, சுதந்திரமாக வேட்பாளர்களை தேர்வு செய்தோம்” எனத் தெரிவித்திருந்தார்.