சூறைக்காற்றால் சாய்ந்த 1.50 லட்சம் வாழை மரங்கள் – விவசாயிகள் வேதனை

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட தென்மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, நெல்லை மாவட்டத்தின் சேரன்மகாதேவி, மேலச்செவல், பிராஞ்சேரி, சொக்கலிங்கபுரம், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான அறுவடைக்கு தயாராக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. 1.50 லட்சம் வாழை மரங்கள் அடியோடு செய்ததாகவும், இதனால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.