“தமிழக இடைக்கால பட்ஜெட்… மேனா மினுக்கி உரை!” – பழனிசாமி விமர்சனம்

“கடந்த 5 ஆண்டுகளைப் போல இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரையாகத்தான் இருக்கிறது” என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “ஏமாற்று வேலை திராவிட மாடல் அரசு தனது கடைசி பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு எப்படி காது குத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறோம். 2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கைகூட நிறைவேற்றவில்லை. திமுகவினர் 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்கிறார்கள்.

அரசு ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்த அரசு ஏமாற்றியுள்ளது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளைப் போல இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனா மினுக்கி உரையாகத்தான் இருக்கிறது.

நிதி நிலைமையை சரிசெய்ய ரகுராம் ராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பின்புதான் கடன் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே சென்றால், மக்கள் மீது வரிச்சுமை அதிகரிக்கும். தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.16,000 கோடி அதிகரித்துள்ளது.

வேளாண் பட்ஜெட் எனக் கூறி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும். உற்றுப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். இதற்கு உதாரணம் இந்த நிதிநிலை அறிக்கை.

வரவு செலவு திட்டம் பற்றி உருப்படியாக எதுவும் இல்லை. ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் சட்டமன்ற நிகழ்வு நடைபெறும் என தெரிவித்தார்கள். ஆனால் ஐந்து வருடங்களில் மொத்தமாகவே 140 நாட்கள் தான் சட்டப்பேரவை கூட்டப்பட்டிருக்கும் என கருதுகிறேன். அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்கும்” என்று பழனிசாமி தெரிவித்தார்.