“தவெக ஆட்சியின் முகம் போகப் போக தெரியும்” – தஞ்சையில் உதயநிதி பேச்சு

“பத்து நாட்களிலேயே மக்கள், பெண்கள், இளைஞர்கள் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணர்ந்து இருப்பார்கள். போகப் போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரிய வரும்,” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான திமுக குடும்பங்கள் இருப்பதால் தான் எவ்வளவு பெரிய புயலை சந்தித்தாலும் நாம் திரும்ப திரும்ப மீண்டும் எழுந்து வருகிறோம். திமுக வெறும் அரசியல் இயக்கம் கிடையாது, வெறும் ஒரு கட்சி கிடையாது. திமுக ஒரு சமுதாய இயக்கம். தேர்தலில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம். அது மற்ற கட்சிகளை தான் பாதிக்கும்.

தேர்தல் அரசியலில் தான் நாம் தோற்றுள்ளோம். கொள்கை அரசியலில் திமுக எப்போதும் தோற்காது. ஆளும் கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் நமக்கு வாக்களித்த வாக்களிக்காத மக்களுக்காகவே நாம் உழைப்போம். தமிழகத்திற்கு வரும் ஆபத்துகளை எல்லாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். மாநில உரிமைகளை நிச்சயம் காப்போம்.

இந்த பத்து நாட்களிலேயே மக்கள், பெண்கள், இளைஞர்கள் இந்த ஆட்சியின் உண்மையான முகத்தை உணர்ந்து இருப்பார்கள். போகப் போக இன்னும் பலருக்கு பல உண்மைகள் தெரிய வரும். தாயின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய ஒரு குழந்தை கிளுகிளுப்பை ஆட்டி விளையாட்டு காட்டுபவர்களை பார்த்து மயங்கும். அந்த குழந்தை கிளுகிளுப்பை காட்டுபவர் நிரந்தரமாக இருக்காது. கொஞ்ச நேரத்திற்கு பிறகு குழந்தைக்கு உண்மையான பாசம் எதுவென தெரிந்து தாயின் முகத்தை தேடும். தாயிடம் மீண்டும் வரும்.

அதுபோல இந்த கவர்ச்சி மாயாஜாலத்தை காட்டி மக்களை ஈர்த்துள்ளனர். இந்த கவர்ச்சி மக்களின் கஷ்டங்களை போக்காது. அடிப்படை பணிகளை நிறைவேற்றாது. எந்த பிரச்சனைக்கும் அது தீர்வு காணாது. எனவே தமிழகத்திற்கு தாயாக இருக்கக்கூடிய நமது கழகத்தை மற்றும் தலைவரை நோக்கி நிச்சயம் அந்தக் குழந்தை விரைவில் வரும். சூரியன் ஒருபோதும் மறையாது மீண்டும் உதிக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தேர்தலுக்கு முன்பாக மக்களை சந்தித்து பல்வேறு பணிகளை திமுக செய்தது. ஆனாலும் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை?. ஆனால், தேர்தலுக்கு எந்தப் பணிகளையும் செய்யாமல், மக்களை கூட சந்திக்காமல், பாக முகவர்கள், பூத் ஏஜெண்டுகள், வாக்கு எண்ணும் ஏஜெண்டுகள் கூட நியமிக்காமல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அது தவறு இல்லை.

அவர்களின் வெற்றிக்கு காரணம் சமூக வலைதளம். இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி சிறுபிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வைத்து, அவர்களின் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்யவைத்து திட்டமிட்டு வாக்களிக்க வைத்து ஆட்சிக்கு வந்துள்ளனர். அது நம் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. இனி நாம் உஷாராக இருந்து அதையும் முறியடிக்க திட்டங்களை தீட்டியுள்ளோம். எனவே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்று பணியாற்றுங்கள்.” என்று ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.