மாணவர்கள், படித்த இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் திமுக ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை ஏமாற்றிய, துரோகம் செய்த திமுக அரசுக்கு எதிரான அவர்களின் சாபம் இந்த ஆட்சியை வீழ்த்தும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவில்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார்.
தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்றத் தவறியதும், வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்த துரோகத்தை ஒப்புக்கொள்வதும் கண்டிக்கத்தக்கவை.
அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”திமுக ஆட்சியில் இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 45,126 பேர், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 24,927 பேர், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 12,894 பேர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 11,244 பேர், என மொத்தம் 94,191 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருக்கிறார். இது திமுக உறுதியளித்த வேலைவாய்ப்புகளில் 17% மட்டுமே.
2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ”திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் 3.50 லட்சம் பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் (வாக்குறுதி எண்:187), 4 வகையான பணிகளை மேற்கொள்ள 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் (வாக்குறுதி எண்:188,189, 190,191)” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், வெறும் 94,191 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டிருப்பது திமுக அரசின் தோல்வி மட்டுமல்ல… தமிழக இளைஞர்களுக்கு திட்டமிட்டு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகமும் ஆகும்.
திமுக அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையும் தாண்டி, இயல்பாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட செய்யவில்லை என்பது தான் பெரும் துரோகம். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த காலியிடங்கள் 2021ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படியானவையாகும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐந்தாண்டுகளில் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கக் கூடும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றாலும், புதிதாக ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலியிடங்களையாவது திமுக அரசு நிரப்பியிருக்க வேண்டும்.
ஆனால், புதிதாக ஏற்பட்ட காலியிடங்களில் பாதி கூட நிரப்பப்படவில்லை என்பதில் இருந்தே திமுகவின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையிலான வித்தியாசம் ஆர்க்டிக் துருவத்திற்கும், அண்டார்டிகா துருவத்திற்கும் இடையிலான தொலைவை விட அதிகம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்த இளைஞர்களுக்கு ஐந்தாண்டுகளில் திமுக செய்தது துரோகம், துரோகம், துரோகம் மட்டுமே.



