“விஜய்காந்த் தேமுதிகவை தொடங்கி வாழ்நாள் முழுவதும் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததை விஜய்காந்த் ஆன்மா ஏற்காது” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.
மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மார்ச் 1-ல் நடைபெறுகிறது. அதே இடத்தில் அங்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா மற்றும் மத்திய அரசு திட்டங்களின் தொடக்க விழாவும் நடைபெறுகிறது. இவ்விரு நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மத்திய அரசு மற்றும் கட்சி விழாவுக்காக மண்டேலா நகரில் இரு மேடைகள் அமைக்கப்படுகின்றன. இப்பணியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
கட்சி நிர்வாகிகளுடன் எல்.முருகன் ஆலோசனை நடத்தினர். மாநில நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், ராம.சீனிவாசன், கதலி நரசிங்கபெருமாள், மாவட்ட தலைவர்கள் மாரிசக்கரவர்த்தி, ராஜசிம்மன், சிவலிங்கம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மகா சுசீந்திரன், சசிராமன், சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் எல்.முருகன் கூறியது: “மார்ச் 1-ல் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் அனைவரும் கொள்கின்றனர். இந்தப் பொதுக் கூட்டம் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டமாக இருக்கும்.
பிரதமர் வருகை திமுகவை வீட்டுக்கு அனுப்பும். திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை. இதற்காக முருக பக்தர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நீதிபதி உத்தரவிட்டார். இதற்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக அரசியல் செய்து வருகிறது.
திமுகவுக்கு பாடம் புகட்டும் விதமாகவும், தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் வீட்டு வாசலில் விளக்கேற்றி நாளை (பிப்.23) கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்.
அதிமுக – பாஜக கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா, இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி எங்கு செல்லும் என்பது தெரியவில்லை. எங்கள் கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கட்சிகளுடன் பேசி வருகிறார்.
நாம் தமிழக அணி, டெல்லி அணி தேசிய அணி. இந்த தேசத்தின் நலன், இரட்டை எஞ்சின் சர்க்கார் இன்றைக்கு வேகமாக முன்னேற்றம் கண்டுள்ளது. பிஹார், ஹரியானா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழகத்திலும் இரட்டை எஞ்சின் சர்க்காரைத் தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.





