திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் என்ன?

 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி திமுக தேர்​தல் அறிக்​கையை மு.க.ஸ்டாலின் நேற்று வெளி​யிட்​டார். வரு​மான வரி செலுத்​தாத குடும்​பத்தை சேர்ந்த இல்​லத்​தரசிகளுக்கு வாஷிங் மெஷின், டிவி, பிரிட்​ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோக பொருட்​கள் வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்​பில் கூப்​பன் வழங்​கும் ‘இல்​லத்​தரசி’ திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று அவர் அறி​வித்​துள்​ளார்.

சட்​டப்​பேரவை தேர்​தலை முன்னிட்டு, திமுக தேர்​தல் அறிக்​கையை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று வெளியிட்டார். அவர் பேசி​ய​தாவது: கடந்த 5 ஆண்டுகால ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மகளிர் உரிமைத்​தொகை உள்​ளிட்ட ஏராள​மான திட்​டங்​களைச் செயல்​படுத்தி தமிழகத்தை அனைத்து துறை​யிலும் வளர்த்​தோம்.

தொலைநோக்​குத் திட்​டங்​கள் மூல​மாக தமிழகம் முழு​மை​யான வளர்ச்​சி​யைப் பெற்​றுள்​ளது. தமிழகத்​தில் கல்​வியை, கட்​டமைப்​பை, சமூகநீ​தி​யை, இது​வரை நாம் அடைந்த முன்​னேற்​றத்தை பாது​காக்க வேண்​டு​மா​னால் திமுக ஆட்​சி தொடர வேண்​டும். திரா​விட மாடல் 2.0 அமைய வேண்​டும்.

அதற்கு அடித்​தள​மாக, உங்​களின் கனவு​களை நிறைவேற்ற ‘ஸ்டா​லின் ஸ்டேட்​மென்ட்டை (Stalin Statement)’ வழங்​கி​யிருக்​கிறேன். அதன் விரி​வாக்​கம்​தான் திமுக​வின் தேர்​தல் அறிக்​கை. வரு​மான வரி செலுத்​தாத குடும்​பங்​களைச் சேர்ந்த இல்​லத்​தரசிகள், ரூ.8 ஆயிரம் மதிப்​பிலான கூப்​பனை பயன்​படுத்தி வாஷிங் மெஷின், டிவி. பிரிட்ஜ், மிக்​சி, மைக்​ரோவேவ் அவன், மின் அடுப்​பு​கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்​களை புதி​தாக வாங்​கிக்​கொள்ள அல்​லது ஏற்​கெனவே பயன்​படுத்தி வரும் பழைய பொருட்​களுக்கு மாற்​றாக​ பெற்​றுக்​கொள்ள ‘இல்​லத்​தரசி’ திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

முதல்​வரின் காலை உணவு திட்​டம் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்​தப்​படும். 1.31 கோடி சகோதரி​கள் பெற்று வரும் மகளிர் உரிமைத் தொகை ​ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். இலவச மின்​சா​ரம் பெறும் 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட விவ​சா​யிகளுக்கு நவீன மின் பம்ப்செட் வழங்​கப்​படும்.

அடுத்த 5 ஆண்டு​களில் 10 லட்​சம் புதிய வீடு​கள் கட்​டித்​தரப்​படும். முதல்​வரின் மருத்​துவக் காப்​பீடு திட்​டத்​தில் சேர்க்​கப்​படு​வதற்​கான வரு​மான வரம்பு ரூ.5 லட்​ச​மாக​வும், காப்​பீட்​டுத்​தொகை ரூ.10 லட்​ச​மாக​வும் உயர்த்​தப்​படும். நெல் கொள்​முதல் விலை குவின்​டாலுக்கு ரூ.3500, கரும்பு கொள்​முதல் விலை டன்னுக்கு ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். பால் கொள்​முதல் விலை லிட்​டருக்கு ரூ.5 உயர்த்தி வழங்​கப்​படும். முதி​யோர் உதவித்​தொகை ரூ.1,200-ல் இருந்து ரூ.2 ஆயிர​மாக​வும், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான உதவித்​தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்​தப்​படும்.

மீன்​பிடி தடைக்​கால சிறப்பு நிவாரணத் ​தொகை ரூ.8 ஆயிரத்​தில் இருந்து ரூ.12 ஆயிர​மாக​வும், மீன்​பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத்​தொகை ரூ.6 ஆயிரத்​தில் இருந்து ரூ.9 ஆயிர​மாக​வும் உயர்த்​தப்​படும். சுயஉதவிக் ​குழு உறுப்பின​ராக இருக்​கும் பெண்​களை, தொழில் ​முனை​வோ​ராக முன்​னேற்ற பிணையின்றி ரூ.5 லட்சம் வரை மானி​யத்​துடன் கடன் வழங்​கப்​படும்.