தேர்தல் ஆவணங்களின்படி அன்புமணியே தலைவர்!

தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அன்புமணி தலைவராக உள்ளார். உரிமை கோருவோர் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு பாமக வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

பாமக.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் கட்சியினர் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையத்தை இருவரும் அணுகினர். இதில், தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி பாமக.வின் தலைவராக அன்புமணி இருக்கிறார். அவரது பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ளது என்ற பதில் கடிதத்தை தேர்தல் ஆணையம் அனுப்பியது.

அதன்படி, பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்குத்தான் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தை அணுகி மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்பினர் பெற்றனர்.