பரந்தூர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஏகனாபுரம் மக்கள் வாக்களிப்பு

பரந்தூர் விமான நிலை​யத் திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து கடந்த மக்​கள​வைத் தேர்​தலைப் புறக்​கணித்த ஏகனாபுரம் மக்​கள் இந்த முறை ஆர்​வ​முடன் வாக்​களித்​தனர்.

இந்​தக் கிராமத்​தில் வாக்​குப்​ப​திவு தொடங்​கிய 2 மணி நேரத்​தில் 25 சதவீத வாக்​கு​கள் பதி​வானது குறிப்​பிடத்​தக்​கது. சென்​னைக்கு இரண்​டாவது சர்​வ​தேச விமான நிலை​யம் அமைக்க காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூர் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் உள்ள 5,746 ஏக்​கர் நிலத்​தைக் கையகப்​படுத்த அரசு முடிவு செய்​தது.

இதற்கு ஆரம்​பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரும் ஏகனாபுரம் உள்​ளிட்ட 13 கிராம மக்​கள், நிலம் மற்​றும் வாழ்​வா​தா​ரத்​தைப் பறிக்​கும் இத்​திட்​டத்தை ரத்து செய்​யக் கோரி 1,300 நாட்​களுக்​கும் மேலாகத் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது, தங்​கள் கோரிக்​கைகள் செவி​ சாய்க்​கப்​ப​டாததைக் கண்​டித்து ஏகனாபுரம் மக்கள் ஒட்டு மொத்​த​மாகத் தேர்​தலைப் புறக்​கணித்​தனர்.

ஒரு சில அரசு ஊழியர்​களைத் தவிர, ஊரே மொத்​த​மாக வாக்​களிக்​காமல் தங்​களின் எதிர்ப்​பைப் பதிவு செய்​தனர். இருப்​பினும், தற்​போதைய சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போராட்​டக் குழு​வினர் புதிய முடிவை அறி​வித்​தனர்.

‘ஜன​நாயக ரீதி​யாக எங்​களின் உரிமை​களை நிலை​நாட்​ட​வும், எங்​களு​டன் யார் துணை நிற்​கிறார்​களோ அவர்​களுக்கு ஆதர​வளிக்​க​வும் வாக்​களிக்​கப் போகிறோம்’ என அவர்​கள் ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தனர்.

அதன்​படி, நேற்று காலை வாக்​குப்​ப​திவு தொடங்​கிய​வுடன் மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று வாக்​களித்​தனர். காலை 9 மணி அளவிலேயே 25 % வாக்​கு​கள் பதி​வாகி இருந்​தன.