என்னைத் தொலைக்காட்சியில் மட்டுமே பார்க்க முடிகிறது என ஒரு பெண்மணி ஆதங்கப்பட்டார். அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்பெல்லாம் தொகுதி மக்களுடன் நேரடியாகக் கலந்து பழகினேன். தற்போது மாநிலத் தலைவர் பொறுப்பில் இருப்பதால், என்னைத் தொலைக்காட்சியில் மட்டுமே பார்க்க முடிகிறது என ஒரு பெண்மணி ஆதங்கப்பட்டார். அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. தொகுதி மக்களின் பிள்ளையாக இருந்த என்னை, காங்கிரஸ் தலைமை இன்று தமிழகத்தின் பிள்ளையாக மாற்றி 234 தொகுதிகளிலும் பணியாற்றும் பொறுப்பை வழங்கியுள்ளது.இருப்பினும், எனது தொகுதி மக்கள் விரும்பினால் இந்தத் தலைவர் பதவியைத் துறந்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுடனேயே ஒரு சாதாரணக் குடிமகனாக வாழ நான் தயாராக இருக்கிறேன்.
ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 6-ம் தேதி சென்னை வழியாகப் புதுச்சேரிக்குச் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 9-ம் தேதி தமிழகத்திற்கு அவரை வரவழைப்பதற்கான திட்டமிடல்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





