சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 21, 22, 23-ம் தேதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதி ஆகிய நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்தச் சூழலில், தேர்தலையொட்டி 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் அதற்கு முதல் இரு நாட்கள் ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி தனியார் பார்கள், நட்சத்திர விடுதிகளிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நான்கு நாட்களிலும் விற்பனை மட்டுமின்றி, மதுபான தயாரிப்பு, மதுபானங்களை வாகனங்களில் கொண்டு செல்லுதல் என அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
புதுவை, காரைக்காலிலும் விடுமுறை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரி, காரைக்காலி்லும் வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை 3 நாட்களுக்கு மதுபானக்கடைகள் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடந்தது. இதையொட்டி கடந்த 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்காலில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கிறது.
இதையடுத்து துணைநிலை ஆளுநர் உத்தரவுப்படி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ தாமஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், “தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு மாநிலத்துடன் எளிதில் ஊடுருவக்கூடிய எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் தேர்தல் இயந்திரத்திற்குத் திறம்பட ஆதரவளிக்க வேண்டும்.
தேர்தல் செயல்முறையின் நேர்மையை நிலைநிறுத்த புதுச்சேரியின் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் “மதுவிலக்கு நாட்களை” அமல்படுத்துவது அவசியமாகியுள்ளது.
ஆகவே, புதுச்சேரி கலால் விதிகள், அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள சாராயம், கள்ளு மற்றும் மதுபானம் வழங்கும் பார்கள் மற்றும் உணவகங்கள் உட்பட அனைத்து மதுபானக் கடைகளும் ஏப்ரல் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 23 வரை மூட உத்தரவிட்டுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.




