மதுபான பணியாளர்கள் இன்று குடும்பத்துடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய, ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொகுப்பூதிய, ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிறைவுக்கு பிறகு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் கடை பணியாளர்களை கொண்டு செயல்படுத்தாமல் மாற்று திட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாகம், அமைச்சர் என பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று (3-ம் தேதி) சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று, தலைமைச் செயலகம் முன் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.





