தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்காற்று வீசும். எனவே தென் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்தது.அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் பாதுகாப்பாக கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
வழக்கமாக வார இறுதி நாட்களில் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.ராமேசுவரத்தில் கடைக்கோடியில் உள்ள தனுஷ்கோடி பகுதியில் நேற்று முதல் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. பனைமர உயரத்திற்கு அலைகள் எழுப்புகின்றன.
இந்த பகுதியில் வீசும் சூறாவளி காற்று காரணமாக கடற்கரை மணல்கள் சாலைகளை மூடியுள்ளன.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.