மெரினா கடற்கரையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அமைக்கப்பட உள்ள 300 கடைகளுக்கான வியாபாரிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு, சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இது தொடர்பான அறிவிப்பு, சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள 1,417 வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட அறிவிப்புகளை 21 வியாபாரிகள் பெற மறுத்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிட்டுள்ளவாறு மெரினா கடற்கரையின் 4 நீலக்கொடிதிட்டப் பகுதிகளில் மொத்தம் 300 கடைகள் அமைக்கப்பட உள்ளன உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தலைமையிலான அலுவலர்கள் அடங்கிய இடைக்கால குழுவின் ஒத்துழைப்புடன் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால் வசந்தகுமார், முன்னாள் மாவட்ட முதன்மை நீதிபதி பி.மோகன்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் துணை பதிவாளர் ஆர்.ரங்கநாதன் ஆகியோர் மேற்பார்வையில் குலுக்கல் நடைபெற்றது.
ஏற்கெனவே மெரினா கடற்கரையில் உணவு வகைப்பாட்டில் 848 கடைகள், அலங்கார வகைப்பாட்டில் 261, பொம்மைகள் வகைப்பாட்டில் 308 என மொத்தம் 1,417 கடைகளை நீதிமன்றம் அடையாளம் கண்டுள்ளது. இதில், ஒவ்வொரு வகையிலும் தலா 100 வியாபாரிகள் என 300 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில் தலா 5 கடைகள் என 15 கடைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட வியாபாரிகள் பட்டியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த குலுக்கல் நிகழ்வு, 4 எல்இடி திரைகளில் காட்சிப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, இந்த குலுக்கல் நிகழ்வை மெரினா கடற்கரை வியாபாரிகள் புறக்கணித்தனர். மேலும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கடற்கரையில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
இது தொடர்பாக விவேகானந்தர் கடற்கரை மணற்பரப்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் சசிகுமார் கூறும்போது, “மெரினா கடற்கரையில் 1996 கடைகள் உள்ளன. இந்த கடைகளை நம்பி 5 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் மீனவர்கள்.
எங்கள் கருத்தை கேட்காமல், இங்கு 300 பேருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வை புறக்கணித்துள்ளோம். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், கடைகளை முறைப்படுத்தி, அனைத்து கடைகளுக்கும் ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம்” என்றார்.



