ஸ்ரீரங்கம் தொகுதியில் முத்தரையர் சங்க நிர்வாகியை களமிறக்க பாஜக – அதிமுக திட்டம்?

ஸ்ரீரங்கம் தொகுதியில் திரைப்பட நடிகரும், முத்தரையர் சங்க நிர்வாகியுமான ஒருவரை களமிறக்க பாஜக-அதிமுக திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். முத்தரையர்களுக்கு என்று முதலில் தொடங்கப்பட்ட சங்கம், தமிழ்நாடு முத்தரையர் சங்கம். அதன் தலைவராக அம்பலத் தரசு இருக்கிறார். இவர், வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்று இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அடுத்ததாக, ஆர்.வி. என்றழைக்கப்படும் ஆர்.விஸ்வநாதன் ஆரம்பித்த தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம், இந்தத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்ட ணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல, கே.கே.செல்வ குமார் தொடங்கிய வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம், திமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன் தேர்தல் வேலையையும் செய்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவரான ஆர்.விஸ்வநாதனின் மகன் ஆர்.வி.பரதன் களமிறக்கப்படலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. இவர், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, 2011 சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி உள்ளிட்ட 17 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார்.

இது குறித்து சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஆர்.வி.பரதன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் எங்களது தலைவர் ஆர்.வி-க்கு இடமளித்து தே.ஜ. கூட்டணியில் உரிய மரியாதை அளித்தனர். வரும் தேர்தலில் எங்களது கட்சிக்கு 3 சீட்டுகள் கேட்க திட்டமிட்டுள்ளோம்.

2 சீட்டுகள் கிடைக்கலாம் என்று நினைக்கிறோம். அப்படி கிடைத்தால் புதுக்கோட்டை, ஸ்ரீரங்கம் தொகுதிகளில் போட்டியிடுவோம். நான் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக, பாஜக கட்சிகள் விரும்புகின்றன. விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த நடிகர் ஆர்.வி.பரதன் போட்டியிடுவதாக பரவும் தகவலால் ஸ்ரீரங்கத்தில் தற்போதே அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.