புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தரங்களுக்கு முழுமையாக ஏற்பில்லை – ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் கவலை

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் அமையவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கூட்டாகத் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை இப்புதிய வரைவு எவ்வாறு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றியும், இவ்வரைவு குறித்த பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் தமக்கு விளக்கமளிக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்புதிய சட்டவரைவு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிப்பதுடன் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் சோல், வலுகட்டாயத் தடுத்துவைப்பு தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் பிரதித்தலைவர் மத்தியூ கில்லெற், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் தலைமை அறிக்கையாளர் கேப்ரியெல்லா சிற்ரொனி, சட்டவிரோத மற்றும் வலுகட்டாய தண்டனை வழங்கல்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மொரிஸ் ரிட்போல்-பின்ஸ், மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலர், தனியுரிமைக்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அனா பிரையன் நௌக்ரெரெஸ் மற்றும் சித்திரவதைகள், மிகமோசமானதும், மனிதாபிமானமற்றதுமான தண்டனைகள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அலிஸ் ஜில் எட்வட்ஸ் ஆகிய எழுவரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கூட்டாக அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது;

உங்களது அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிக்காட்டும் வகையிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறோம். தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதில் மேற்கொள்வதற்கென கடந்த 2023 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதிலும், பொதுமக்களின் கருத்தறியும் நோக்கில் புதிய வரைவை வெளியிட்டதிலும் உங்களது அரசாங்கம் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை பெரிதும் வரவேற்கிறோம். அதேபோன்று சட்டவாட்சி பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள், சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படவேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் சில சரத்துக்களின் ஊடாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்டப்பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளமை என்பன உள்ளடங்கலாக இப்புதிய வரைவில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டுகிறோம். இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்பதுடன், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் தயாரிக்கப்படவில்லை.

குறிப்பாக இச்சட்டவரைவின் 3 ஆம் பிரிவில் ‘பயங்கரவாதம்’ எனும் பதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை விட முன்னேற்றகரமானதாக இருப்பினும், இதுவும் மிகப்பரந்துபட்டதாகவும் சர்வதேச நியமங்களுக்கு உட்படாததாகவுமே காணப்படுகிறது. இவ்வாறான பரந்துபட்ட வரைவிலக்கணங்கள் திட்டமிடப்படாத எதிர்மறை விளைவுகளுக்கும், திட்டமிடப்பட்ட வன்முறைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கும் வழிகோலும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 15(1) ஆம் சரத்தின் பிரகாரம் குற்றவியல் சட்டங்கள் மிகவும் ‘குறிப்பானதாக’ இருக்கவேண்டும். அதனூடாகவே எவ்வாறான நடவடிக்கைகளைக் குற்றவியல் குற்றமாகக் கருதமுடியும் என்பது குறித்தும், அவ்வாறான குற்றங்களைப் புரிவதனால் ஏற்படக்கூடிய சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்தும் தெளிவான புரிதலை ஏற்படுத்தமுடியும். இருப்பினும் இத்தகைய விரிவான வரைவிலக்கணமானது சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதற்கும், அதன்விளைவாக அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன ஒடுக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.

அதேவேளை இப்புதிய வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள சில குற்றங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 19 ஆவது சரத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கான உரிமைக்கு முற்றிலும் முரணானவையாக உள்ளன. கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மீது பிரயோகிக்கப்படும் எந்தவொரு மட்டுப்பாடும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 19(3) ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டுள்ள தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யவேண்டும். கருத்து வெளிப்பாடு மற்றும் தகவல்களை அறிதல் ஆகியவற்றின்மீது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்தல் எனக்கூறி மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் முற்படுமேயானால், அதற்கு நியாயமான நோக்கம் இருப்பதுடன் இவ்வாறு மட்டுப்பாடு விதிப்பதன் ஊடாக அந்நோக்கங்கள் நிறைவேறும் என்பதை நிரூபிக்கவேண்டும். இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் 8(2) ஆம் பிரிவை 78 ஆம் பிரிவுடன் இணைத்து நோக்குகையில், அதனூடாக கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் முடக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.

அதுமாத்திரமன்றி இப்புதிய சட்ட வரைவின் ஊடாக நபரொருவரின் (சந்தேகநபர்) உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன போதியளவுக்கு உறுதிப்படுத்தப்படாத வேளை, அவரைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்குமான மட்டுமீறிய அதிகாரிகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு எவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச அகதிகள் சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றி எமக்கு விளக்கமளிக்குமாறு கோருகிறோம்.

அதேபோன்று தற்போது இவ்வரைவு தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சகல தரப்பினராலும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் உரியவாறு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமா எனவும், இவ்வரைவு தொடர்பான பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு அரசாங்கத்தினால் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெளிவுபடுத்துமாறு வேண்டுகோள்விடுக்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.