சிறைப் பிடிக்கப்பட்டிருந்த கம்போடிய இராணுவ வீரர்கள் 18 பேரைப் புதன்கிழமை (31) தாய்லாந்து விடுவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், கடந்த சனிக்கிழமை (27) இரு நாடுகளுக்கும் இடையே உடன் அமுலாகும் வகையில் போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு இணங்கின. முன்னதாக, 20 நாட்களாக நீடித்த போரில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இரு நாடுகளிலும் ஏறத்தாழ அரை மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.
போர் நிறுத்தம் கைச்சாதிடப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை கம்போடிய இராணுவத்தினரைத் தாய்லாந்து விடுவிப்பதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி விடுவிப்பு நடவடிக்கையைத் தள்ளிப்போட்டது.
அந்த 18 பேரும் 155 நாள்கள் தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் எனவும் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 10.00 மணியளவில் எல்லைச் சோதனைச்சாவடி ஒன்றில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர் எனவும் கம்போடியத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.





