அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து ; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆண்டு இந்தியாவின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து இயந்திரக் கோளாறினால் ஏற்பட்டதல்ல; மாறாக, எரிபொருள் வழங்கல் கைமுறையாக நிறுத்தப்பட்டதன் (Intentional Manual Fuel Cut-off) விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என இத்தாலிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

‘கொரியர் டெல்லா செரா’ (Corriere della Sera) நாளிதழ், விசாரணை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜூன் மாதம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா 171 விமானத்தின் விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை; அது ஒரு “திட்டமிட்ட செயல்” (Intentional Act) ஆக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததுடன், ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பியிருந்தார். இது இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இதுவரை தனது இறுதி விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை.

ஆரம்பக்கட்ட விசாரணை கண்டுபிடிப்புகள்

2025 ஜூன் மாதம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே, போயிங் 787 டிரீம்லைனர் (Boeing 787 Dreamliner) விமானம் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தின் மீது விழுந்து நொறுங்கியது.

விமான விபத்து விசாரணைப் பிரிவு (AAIB) 2025 ஜூலை மாதம் வெளியிட்ட ஆரம்பக்கட்ட அறிக்கையின்படி, விமானம் புறப்பட்ட சில தருணங்களுக்குள், அதன் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் “Run” நிலையிலிருந்து “Cut-off” நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன.

கொக்பிட் குரல் பதிவில் (Cockpit Voice Recorder – CVR), ஒரு விமானி மற்றவரிடம் “ஏன் எரிபொருளை நிறுத்தினாய்?” என்று கேட்க, அதற்கு பதிலாக “நான் அவ்வாறு செய்யவில்லை” என மற்ற விமானி பதிலளித்தது பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல்கள், விபத்து குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

விமானியின் மனநிலை தொடர்பான சந்தேகங்கள்

விசாரணை வட்டாரங்கள், விமானத்தின் கமாண்டர் சுமீத் சபர்வால் (Captain Sumeet Sabharwal) மீது சந்தேகத்தைத் திருப்பியுள்ளன.

அவர் மன அழுத்தத்தால் (Depression) பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள் – குறிப்பாக விவாகரத்து தொடர்பான பிரச்சினைகள் அவரை பாதித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், அவரது தந்தை இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்து, அவர் ஒரு பொறுப்பான மற்றும் அனுபவமிக்க விமானி என வலியுறுத்தியுள்ளார்.

எதிர்பார்க்கப்படும் பரிந்துரைகள்

இந்த விபத்தின் இறுதி அறிக்கையில், விமானிகளின் மனநல பரிசோதனைகளை கட்டாயமாக்குதல், காலமுறை உளவியல் மதிப்பீடுகள் மற்றும் மனநல கண்காணிப்பு முறைகளை வலுப்படுத்துதல் போன்ற பரிந்துரைகள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப திறனை மட்டுமல்லாது, மனித உளவியல் நிலைத்தன்மையையும் உள்ளடக்கியது என்பதைக் குறிப்பிடும் வகையில், இந்த விபத்து சர்வதேச விமானப் போக்குவரத்து துறையில் முக்கிய திருப்பமாக அமையக்கூடும் என விமான பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.