தாய்வான் எல்லையில் வலம் வரும் போர்கப்பல் மற்றும் போர் விமானங்களினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தாய்வான் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் தீவுதான் தைவான்.
1949இல் சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து தாய்வான் தனிநாடாக பிரிந்து சென்றது. ஆனாலும் சீனா தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாகவே பார்த்து வருகிறது.
ஆனாலும் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தாய்வான் அதனை மறுத்து வருகிறது.
இவ்வாறான பின்னனியில் தாய்வான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுடியயுள்ளது.
இந்நிலையில் தைவான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் , தாய்வானை சுற்றி சீனாவின் 7 விமானங்களும், 11 கடற்படை கப்பல்களும் ரோந்து வந்ததை உறுதி செய்துள்ளது.
மேலும் அவர்களின் ஆயுதப்படைகள் நிலவரத்தை கண்காணித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வரும் தாய்வான் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த செயலால் கிழக்காசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
சீனா தாய்வானை ஒருபோதும் பிரிக்க முடியாத பகுதி என்று கருதி வருகிறது. எனவே தான் தாய்வானைஅடிக்கடி அச்சுறுத்தி, அதன் சுயாட்சியை மிரட்டுவதற்காக, அடிக்கடி தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது.
இதில் விமானங்கள், போர்க்கப்பல்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சுற்றி வளைப்பதும், அதன் விமான பாதுகாப்பு மண்டலத்தில் ஊடுருவுவதும், போர் ஒத்திகைகள் செய்வதுமாக அந்தப் பகுதியில் எப்போதும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
அதேவேளை, தீவு நாடான தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தாய்வானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதுடன் சீனா படையெடுக்கும் பட்சத்தில் தாய்வானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளமையயும் குறிப்பிடத்தக்கது





